ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் சேவை கூடிய விரைவில் நடைமுறைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை வழியாக, வந்தே பாரத் ரயில் சேவை சென்னை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய ரயில் சேவையை ராமேஸ்வரத்தில் இருந்து பிரதமர் மோடி துவங்கி வைக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இதற்கு இடையில் தற்பொழுது ராமேஸ்வரத்தில் இருந்து காரைக்குடி வழியாக சென்னை வந்தடைய கூடிய வகையில் புதிய வந்தே பாரத் ரயில் சேவையின் கால அட்டவணை வெளியாகி உள்ளது.
வெளியாகி உள்ள கால அட்டவணையின் நேரப்படி அதிகாலை 5:30 மணிக்கு சென்னை எக்மோரில் இருந்து கிளம்பும் இந்த வந்தே பாரத் ரயில் சேவை மதியம் 1 மணி 15 நிமிடத்தில் ராமேஸ்வரம் வந்தடையும்.
சென்னை எக்மோரில் இருந்து புறப்படும் இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம்,திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, இராமநாதபுரம் வழியே வந்து இறுதியில் ராமேஸ்வரத்தை வந்தடையும்.
அதே சமயத்தில் மதியம் 2:30 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து கிளம்பும் வந்தே பாரத் ரயில் இரவு 10:20 மணிக்கு சென்னை எக்மோர் சென்றடையும்.
இந்த ரயில் சேவையின் கால அட்டவணைப்படி சென்னையில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு வெறும் மூன்றரை மணி நேரத்தில் பயணிகளால் பயணம் செய்ய முடியும். அதுமட்டுமின்றி சென்னையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் பயணிகள் வெறும் 8 மணி நேரத்திற்குள்ளாகவே தங்களது இலக்கை அடைவதன் மூலம், அவர்களுக்கு நிறைய நேரமும் மிச்சமாகும்.
கால அட்டவணை வெளியானதும் இந்த ரயில் சேவை கூடிய விரைவில் அமலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.
