உடலில் குறை இருந்தாலும், உள்ளத்தில் உறுதி இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை தனது வாழ்க்கைப் பயணத்தின் மூலம் நிரூபித்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தமீம் அன்சாரி.
ஒரே ஒரு கையால் சைக்கிளை இயக்கி, இதுவரை 67 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் மேல் பயணம் மேற்கொண்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தமீம் அன்சாரி, இன்று பலருக்கும் நம்பிக்கையின் அடையாளமாக திகழ்ந்து வருகிறார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில், வருமானமின்றி தவித்த தனது குடும்பத்திற்கு உதவுவதற்காக முதன்முதலாக சைக்கிள் பயணத்தைத் தொடங்கிய அவர், பின்னர் அதை சமூக விழிப்புணர்வுப் பயணமாக மாற்றினார். இன்று அவரது பயணம், சாதனைகளின் வரலாறாக மாறியுள்ளது.
காஷ்மீரின் அமைதியான பள்ளத்தாக்குகளிலிருந்து கன்னியாகுமரியின் தென்கோடி முனை வரை சைக்கிளில் பயணம் மேற்கொண்டு, இயற்கை வளங்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக விழிப்புணர்வுகளை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்.
தனது சாதனைப் பயணம் குறித்து பேசிய தமீம் அன்சாரி, இதுவரை 67 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் நோக்கில், அடுத்த மாதம் இந்தியாவில் இருந்து லண்டன் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதற்கான தீவிரப் பயிற்சியாக, தற்போது தினமும் சென்னையில் இருந்து திண்டிவனம் வரை சைக்கிளில் சென்று, மீண்டும் சென்னை திரும்பி தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
தமீம் அன்சாரியின் இந்தப் பயணம் வெறும் உடல் வலிமையின் வெளிப்பாடு மட்டுமல்ல; அது மன உறுதி, தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் உயிரோவியமாகும். மாற்றுத்திறன் என்பது தடையல்ல, சாதனைக்கான மற்றொரு பாதை என்பதை அவர் தனது வாழ்வின் மூலம் நிரூபித்து வருகிறார்.
எண்ணற்ற சவால்களைக் கடந்து, ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களை வென்று, லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் நம்பிக்கையை விதைத்து வரும் தமீம் அன்சாரி, இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதருக்கும் உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக மாறியுள்ளார்.
