கோவையில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் போலீசார் சுட்டுப்பிடித்த 3 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள 13 வீடுகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 56 சவரன் நகைகள், 3 லட்சம் ரூபாய் ரொக்கம், 3 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. கொள்ளை சம்பவம் குறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். கொள்ளை நிகழ்ந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி மற்றும் அதனை சுற்றிய இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், சந்தேகப்படும் வகையில் 2 பேர் பையுடன் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியே செல்வது தெரிந்தது.

இதனையடுத்து போலீசார் தீவிரப்படுத்தி விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்டது வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள், குளத்துப்பாளையம் பகுதியில் வீடு ஒன்றில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட வீட்டை சுற்றி வளைத்த தனிப்படை போலீசார், பதுங்கி இருந்த கொள்ளையர்கள் ஆஷிக் (45), இர்பான் (48), கல்லு ஆரிப் (60) ஆகிய 3 பேரை பிடிக்க முயற்சித்தனர். அப்போது  போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயற்சித்ததால், போலீசார் அவர்களை காலில் சுட்டுப் பிடித்தனர்.

காயமடைந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், ஆஷிக் என்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு மரணத்திற்கு காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version