ராயபுரம் தவெக எம்.எல்.ஏ. விஜய் தாமு, கன்னியாகுமரி அதிமுக எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம், ராஜினாமா செய்த அம்பாசமுத்திரம் அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ஆகியோரின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், சென்னை இராயபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட கே.வி.விஜய் தாமு, திமுக சார்பில் போட்டியிட்ட ஏ.சுபேர் கானை விட 14,249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
தவெக எம்.எல்.ஏ. விஜய் தாமுவின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சுபேர் கான் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அதேபோல கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தளவாய் சுந்தரம், திமுக வேட்பாளர் ஆர்.மகேஷை விட, 214 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
தளவாய் சுந்தரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக வேட்பாளர் ஆர்.மகேஷ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று, தற்போது ராஜினாமா செய்துள்ள இசக்கி சுப்பையா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை செல்லாது என அறிவிக்கக் கோரி தொகுதி வாக்காளர் காந்திமதி நாதன் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இசக்கி சுப்பையா, காங்கிரஸ் வேட்பாளர் துரையை விட 10,245 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டார் என்ற போதும், ஊழல் நடவடிக்கை மூலம் அவர் வெற்றி பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version