தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜயின் கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் கூறிய “குட்டிக்கதை” மற்றும் சட்டசபையில் அவர் நிகழ்த்திக் காட்டிய ஆக்சன் காட்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழகச் சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் விஜய் விரிவாக பதிலளித்துப் பேசினார்.
அப்போது திமுகவைக் குறிவைத்துத் தனது பாணியில் ஒரு குட்டிக்கதையைக் கூறினார். “ஒரு ஊரில் பெரியவர் ஒருவர் வெயிலில் கண்ணுக்கு மேலே கை வைத்து யாரையோ தேடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு சிறுவன் ‘என்ன தேடுகிறீர்கள்?’ எனக் கேட்க, ‘உங்க அப்பா இங்கிருப்பதாகச் சொன்னார்கள், அவரைக் காணவில்லை, தேடிக்கொண்டிருக்கிறேன்’ என்றாராம் அந்தப் பெரியவர்” என்று விஜய் கூறினார். மேலும், “எங்களுக்கும் இதுபோலச் சம்பந்தமில்லாத கதைகள் பேசத் தெரியும், யாரும் டென்ஷன் ஆக வேண்டாம். வெறும் 5 நிமிடங்கள் பேசியதற்கே கொளத்தூர் ஆட்டம் கண்டுவிட்டது” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மறைமுகமாகச் சாடினார்.
திமுக ஐடி விங்கின் அதிரடிப் பதிலடி
முதலமைச்சர் விஜய்யின் இந்த மறைமுக விமரிசனத்திற்குத் திமுக ஐடி விங் (DMK IT Wing) தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மிகக் கடுமையான சொற்களால் பதிலடி கொடுத்துள்ளது.
“சட்டமன்றம் என்பது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை விவாதிக்கும் மாண்புமிகுந்த இடம். அங்கே மிக மலிவாக, சட்டமன்றத்தின் கண்ணியத்தையே குழிதோண்டிப் புதைத்திருக்கிறார் இந்த ‘இன்ஸ்டா அரசன்’!” என்று சாடியுள்ளது.
மேலும், முதல்வரின் தனிப்பட்ட குடும்ப விவகாரங்களை முன்வைத்து, “அடுத்தவர் அப்பாவைத் தேடும் சி.எம் சார், நாங்க நேரடியாகவே கேட்கிறோம், உங்க குடும்பம் எங்கே? அவர்களை ஏன் நடுத்தெருவில் கைவிட்டீர்கள்? ‘உங்க அப்பா எங்கே?’ என்று உங்கள் பிள்ளைகளிடம் நண்பர்கள் கேட்டால் அவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்று நினைத்ததுண்டா?
சொந்த மனைவியே நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்கும் அளவுக்கு இருக்கும் தனிமனித வாழ்க்கையை வைத்துக் கொண்டு, எந்த முகத்தோடு அடுத்தவர்கள் குடும்பத்தைப் பற்றிக் குட்டிக்கதை சொல்கிறீர்கள்? ஊருக்கு உபதேசம் செய்யும் ‘சோஃபா மாடல்’ முதலமைச்சரே, முதலில் உங்கள் சொந்தக் குடும்பப் பிரச்சினைகளைச் சரிசெய்துவிட்டு, அப்புறம் சட்டமன்றத்தில் வந்து பேசுங்கள்” எனத் திமுக ஐடி விங் மிகக் காரசாரமாகப் பதிவிட்டுள்ளது.
சட்டமன்றத்தில் தொடங்கிய இந்தக் ‘குட்டி ஸ்டோரி’ அரசியல் விவாதம், தற்போது சமூக வலைத்தளங்களில் இருதரப்புத் தொண்டர்களிடையேயும் பெரும் வார்த்தைப் போராக வெடித்துள்ளது.
