தமிழகத்தில் காவிரி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை, விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் தெய்வசிகாமணி தலைமையிலான குழுவினர் நேற்று நேரில் சந்தித்துப் பேசினர்.
டெல்டா பகுதிகளை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கக் கோரியும், விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியும் தஞ்சாவூரில் திமுக சார்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கும், சட்டமன்றத்தில் இது குறித்து குரல் எழுப்பியதற்கும் இச்சந்திப்பின் போது விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
மேலும், விவசாயிகளின் உரிமைகளுக்காகக் களமிறங்கிய எதிர்க்கட்சித் தலைவரை, ஆளும் த.வெ.க அரசின் காவல்துறை கைது செய்த நிகழ்வு தங்களுக்குப் பெரும் மனவருத்தத்தை அளித்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.
பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளைப் புறக்கணிக்கும் த.வெ.க அரசைக் கண்டித்து, 84 விவசாய அமைப்புகள் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய அவர்கள், தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்குச் சட்டமன்றத்திலும் வெளியிலும் திமுக தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகளின் இக்கோரிக்கையை ஏற்ற உதயநிதி ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மற்றும் தி.மு.க தலைவரின் வழிகாட்டுதலின்படி, விவசாயிகளின் நலனுக்காக மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் தி.மு.க எக்காலத்திலும் உற்ற துணையாக நிற்கும் என உறுதியளித்தார்.
