ஈரோட்டில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பேராசிரியரை, சிங்கப் பெண் படை காவலர் உதவியுடன் மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மேட்டுக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வு மையத்தில் மற்றொரு கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ராஜாராம் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வெளிப்புற தேர்வு கண்காணிப்பாளராக பணியில் இருந்துள்ளார்.
தேர்வுப் பணி முடிவடைந்த நிலையில் அங்கிருந்த மாணவி ஒருவரிடம் பேராசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
சுதாரித்துக் கொண்ட அந்த மாணவி உடனடியாக காவல்துறை அவசர கட்டுப்பாட்டு எண் 100க்கு தொடர்பு கொண்டுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற சிங்கப் பெண் படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இதுகுறித்து ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புகாரின் அடிப்படையில் திண்டல் பகுதியில் உள்ள ராஜாராம் கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கு சென்ற மகளிர் போலீசார் அவரை அழைத்து வந்து விசாரணை நடத்தி, புகார் உண்மை என தெரியவந்ததைத் தொடர்ந்து அவரைக் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
