தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க இன்று 9 ஆயிரம் முகாம்கள் நடைபெறும் என்று அறிவித்த முதலமைச்சரின் அறிவுப்பு என்ன ஆனது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அந்த சிறப்பு முகாம்கள் எங்கே நடக்கிறது என பொதுமக்கள் அலைந்து, திரிந்து தேடி வருகின்றனர்.
2021 சட்டமன்ற தேர்தலின் பொழுது திமுக வெற்றி பெற்றால் அனைத்து மகளிர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை ரூபாய் ஆயிரம் வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்த பின்னர், தகுதியுடைய மகளிர்களுக்கு மட்டும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்து தற்பொழுது அது நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து மகளிர்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று ( 4 – 6 – 25 ) அதற்கான சிறப்பு முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் 9000 இடங்களில் நடைபெறும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் அதை நம்பிய மக்கள் உரிமைத்தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்க முகாம்களை தேடி அலைந்து வரும் நிலையில் எந்த இடத்திலும் அப்படி ஒரு முகாம் நடைபெறவில்லை. சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவித்து விட்டு, அவை எங்கே நடத்தப்படும் என்பது பற்றிய தகவலை வெளியிடாதது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
