சேலம் மத்திய சிறையில் உள்ள கைதிகளிடம் இருந்து மாமியாரின் ஜி.பே மூலம் பணம் பெற்று அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்த சிறை வார்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். சில நேரம் சிறை அதிகாரிகள் இவர்களுக்கு தேவையான போதைப் பொருட்கள் உட்பட சில பொருட்களை கைதிகளிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு சப்ளை செய்வதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகும். சிறையில் உள்ள கைதிகள் மூலம் மிக்சர், பிஸ்கெட், பன் உள்ளிட்ட திண்பண்டங்கள் தயாரிக்கப்படுகிறது. இவை அனைத்தும் சிறை வளாகத்தில் வைத்து கைதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேப் போல, சேலம்-ஏற்காடு மெயின் ரோட்டில் சிறை உள்ளதால், சிறைக்கு சொந்தமான ஒரு அறையில் வைத்து அந்த திண்பண்டங்கள் மக்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கைதிகளுக்கு திண்பண்டங்கள் விற்பனை செய்யும் பணியை சேலம் சிறை வார்டன் சுப்பிரமணியம் என்பவர் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
இவ்வாறு விற்பனை செய்யப்படும் பொருட்களுக்குரிய பணத்தை சிறை கணக்கில் வரவு வைக்க வேண்டும். மாறாக அந்த பணம் சிறை கணக்கிற்கு சரியாக வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சுப்பிரமணியம் மீது சிறை நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதனை உறுதிப்படுத்த மிக்சர் உள்ளிட்ட திண்பண்டங்கள் வாங்கிய கைதிகளிடம் விசாரணை நடத்தப்பட்ட போது, பொருட்கள் வாங்கியதற்கு ஜி.பே மூலம் பணம் அனுப்பி வைத்தது தெரியவந்துள்ளது. அந்த ஜி.பே அக்கவுண்ட் யாருடையது என்று விசாரணை மேற்கொண்ட போது, அந்த செல்போன் எண் சிறை வார்டன் சுப்பிரமணியத்தின் மாமியார் செல்போன் எண் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஓராண்டாக ரூ.1,80,000 அவருடைய ஜி.பே அக்கவுண்டுக்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து சிறை வார்டன் சுப்பிரமணியத்திடம் சிறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவரும் அதனை ஒப்புக்கொள்ள, சேலம் சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத், சுப்பிரமணியத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.