மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு உணவகத்தில் மதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ”மத்திய அரசு PMSHRI திட்டத்தைத் திணிக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டிய வைகோ, ஆளுநர் நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலைத் திணிப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
“மும்மொழி கொள்கையை அனுமதிக்கக் கூடாது. மத்திய அரசு அழுத்தம் கொடுத்தாலும் தமிழக அரசு அதை ஏற்கக் கூடாது. அப்படி செய்தால் மீண்டும் ஒரு மொழிப்போர் உருவாகும்” என்றார்.
தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி குறித்து கேள்விக்கு பதிலளித்த வைகோ, “கூட்டணி ஆட்சி எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். 6 மாதம் கால அவகாசம் கொடுப்போம். பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார். மாநில சுயாட்சிக்கு இடையூறு ஏற்படாமல் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்றும், பாஜக திட்டங்களைத் தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
“ராமர் இருக்கும் இடம்தான் அயோத்தி என்பதைப் போல காங்கிரஸ் இருக்கும் இடம்தான் மதசார்பின்மை என்பது அல்ல. மம்தா போன்றோர் எல்லாம் மதசார்பின்மையை முன்னெடுத்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே மதச்சார்பின்மை சொந்தமானதல்ல” என்று வைகோ மேலும் தெரிவித்தார்.
