ஜவ்வாது மலையில் அதானி குழுமம் செயல்படுத்த உள்ள அல்லேரி நீரேற்றுப் புனல்மின் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அரசம்பட்டு காப்புக்காட்டில் 1,800 மெகாவாட் திறன் கொண்ட திட்டத்திற்காக தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகமும், அதானி ஹைட்ரோ எனர்ஜி நிறுவனமும் ஒப்பந்தம் செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்திற்காக 337.452 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளதாகவும், அதில் 228.352 ஹெக்டேர் காப்புக்காடு நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஜவ்வாது இலைச்சருகு அரணை, சாம்பல் இருவாச்சி, மலபார் மலை அணில், செந்நாய், கரடிகள் உள்ளிட்ட பல அரிய உயிரினங்களின் வாழ்விடமாக விளங்கும் அரசம்பட்டு காப்புக்காடு அழிவைச் சந்திக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், அல்லேரி மலையிலிருந்து கிடைக்கும் நீராதாரத்தை நம்பி விவசாயமும், ஏரிகள் மற்றும் கிணறுகளும் இயங்கி வருவதாகவும், பாலாற்றிலிருந்து நீர் எடுக்கும் திட்டம் விவசாய நிலங்களையும் நீர்வளத்தையும் பாதிக்கும் என்றும் கூறியுள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தின் விலை அதிகமாக இருக்கும் நிலையில், சூரிய ஆற்றல், காற்றாலை மற்றும் மின்கல சேமிப்பு போன்ற மாற்று தொழில்நுட்பங்கள் குறைந்த செலவில் மின்சாரம் வழங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அல்லேரி, தென்மலை, ஆழியார் உள்ளிட்ட பகுதிகளில் அதானி குழுமத்துடன் செய்யப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும், மாநில வனத்துறை சுற்றுச்சூழல் அனுமதியை மறுக்க வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார். இயற்கை வளங்களை பாதுகாக்க மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
