தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், சென்னை மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் தா.வேலுவின் ஆதரவாளர் சத்தியமூர்த்தி என்பவரின் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், கட்டுக்கட்டாக வைக்கப்பட்டிருந்த ரூ.9 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அனைத்தும் ரூ.500 நோட்டுகளாக இருந்ததாகவும், இவை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் மட்டுமின்றி, அந்த வீட்டில் இருந்து வாக்காளர் பட்டியல், முக்கிய டைரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்குப் பணம் விநியோகம் செய்யப்பட்டதற்கான ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் மயிலாப்பூர் தொகுதி திமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
