உலக புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைக்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை திறக்கப்பட உள்ளதால் தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ”தமிழ்ச்சமூகம் சுயமரியாதையுடன் தலைநிமிர்ந்து நடைபோடுவதற்கு காரணம் பெரியார்தான். அவரது சிந்தனையை உலகு தொழும் காட்சியை நாம் இந்த பயணத்தில் காண போகிறோம்.
உலகின் மிகப்பெரிய அறிஞர்களை தந்த புகழ்மிக்க அறிவுசார் நிறுவனமாக போற்றப்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப் படத்தை திறக்கப்பட உள்ளதால் பெருமை கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டையொட்டி உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 4 ஆம் தேதி நடைபெறும் கருத்தரங்கில் பெரியாரின் உருவப்படம் திறக்கப்பட உள்ளது.
இதற்கிடையே பெரியார் உருவப்படம் திறப்பு தொடர்ப்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ”ஆக்கம்தான் என் எதிரி என முழங்கி சாதியாலும், பாலினத்தாலும் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காக சுற்றி சுழன்று பரப்புரை செய்த தந்தை பெரியார் அவர்கள் உலகம் முழுமைக்குமானவர்.
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டினையொட்டி உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைத்து, தென்னக மயக்கம் தீர்த்த சுயமாரியாதை இயக்கம் குறித்த இரு நூல்களையும் பன்னாட்டு அறிஞர் பெருமக்கள் முன்னிலையில் வெளியிடுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.