திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்திற்கு தேவையான புதிய திட்டங்கள் குறித்து ஆட்சியர் பிரதீப் குமார் உடன் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆலோசனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர், சமயபுரம் கோவிலில் மணியகாரராகப் பணியாற்றியவர் அதிகளவில் சொத்து சேர்த்த புகாரில் சிக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது குறித்த லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காகவே அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், திருச்சி அரசு மருத்துவமனையில் எலி நடமாட்டம் குறித்த புகார்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள உட்கட்டமைப்புப் பிரச்சனைகள் விரைவில் சரிசெய்யப்படும் என்றும், ஸ்ரீரங்கத்தில் புதிய அரசு மருத்துவமனை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
பழனி நிலம் தொடர்பான சர்ச்சை குறித்துப் பேசிய அமைச்சர், “எதை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்றுகூடத் தெரியாமல் சிலர் இப்போது பழனி நிலத்தை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். அங்கே இப்படி ஒரு நிலம் இருப்பதே இந்தச் சிக்கல் வெடித்த பிறகுதான் எனக்குத் தெரியும். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றச் சொன்னதே நான்தான்; குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது” என்றார். மேலும், தன் மீதும் தன் உறவினர்கள் மீதும் வீண் பழிகளைச் சுமத்தி அரசியல் செய்பவர்கள், மக்களுக்கு நல்லவை செய்ய முன்வந்தால் மட்டுமே மக்கள் அவர்களைத் திரும்பிப் பார்ப்பார்கள் என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
நீட் தேர்வு விவகாரம்: நீட் தேர்வை முழுமையாக அகற்ற வேண்டும் என்பதும், கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதும் தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு என்று குறிப்பிட்ட அவர், அதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றார். நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்தும் போராட்டங்களை மதிப்பதாகத் தெரிவித்த அவர், அதேசமயம் இந்தப் போராட்டங்களை அரசியல் லாபத்திற்காகத் திசைதிருப்ப முயல்பவர்களை அரசு உரிய முறையில் எதிர்கொள்ளும் என்றும், சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்படுவது குறித்து முதலமைச்சர் உரிய நேரத்தில் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.

