சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான வெற்றியினை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெற்றபோதும், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இல்லாததால், மற்ற கட்சிகளின் ஆதரவை தவெக தரப்பு கோரி வருகிறது.

இந்த நிலையில் தவெகவுக்கு அமமுக ஆதரவு அளிக்குமா என்பது குறித்து இன்று மாலை செய்தியாளர் சந்திப்பில் டிடிவி தினகரன் முக்கிய தகவலை  வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்கெடுத்து 11 தொகுதிகளில் போட்டியிட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மன்னார்குடி  தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்று மாலை முக்கிய அறிவிப்பை அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக கூட்டணியில் இணைவதற்கு முன்பாக எடப்பாடி பழனிசாமியை துரோகி என்றும், துரோகத்துக்கு ஆஸ்கர் கொடுக்கலாம் என்றால் அது எடப்பாடிக்கு தான் கொடுக்க வேண்டும் என கூறிவந்த டிடிவி தினகரன், பின்னர் அமித்ஷாவுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இடம்பெற்றார். அதன்பிறகு “எனக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் அண்ணன் தம்பி சண்டைதான். நாங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டின் நலன் கருதி, ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவர கோபங்களை மறந்துவிட்டோம்” என டிடிவி தினகரன் கூறியிருந்தார்.

ஆனால் தற்போது தவெகவுக்கு ஆதரவளிப்பதன் மூலம் கூட்டணி ஆட்சியில் பங்கு கிடைக்க வாய்ப்பிருப்பதோடு,  அமமுகவுக்கு மேலும் வலு சேர்க்கும் திட்டத்தோடு அதிமுக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேற வாய்ப்பு இருப்பதாக அமமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version