நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.3.23 கோடி முறைகேடு நடைபெற்றதாக முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, அரசு அதிகாரிகள் 9 பேர் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர் ஒருவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இதையடுத்து கடந்த ஜூன் 25-ஆம் தேதி சென்னை, திருவண்ணாமலை, கரூர், திண்டுக்கல், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் புகார்தாரர் அளித்த தகவல்களின் அடிப்படையில் விசாரணைக்காக எ.வ.வேலுவுக்கு கடந்த 3ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க முதல் சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி ஆஜராக வேண்டிய நாளில், சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் இருதய சிகிச்சை பெற்று வருவதால் நேரில் ஆஜராக இயலாது என்றும், சிகிச்சை முடிந்ததும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அவர் வழக்கறிஞர்கள் மூலம் விளக்க மனு தாக்கல் செய்து கால அவகாசம் கோரியிருந்தார்.
இதனையடுத்து, வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசு லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அதற்கு தடை விதித்தது.
இந்த தடையை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கோரப்படாத நிவாரணம் தொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக வாதிட்டார். இதற்கு நீதிபதிகள், “தற்போது அவர் திரும்பி வந்துவிட்டாரே. அவரிடம் விசாரணை நடத்துவதில் என்ன பிரச்சினை? அவரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்திருக்கிறார்.
விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தனியாக உத்தரவிட வேண்டிய அவசியமில்லை; அவர் ஒத்துழைப்பார் என நம்புகிறோம்” எனக் கூறி, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்வைக்கலாம் என்றும், இந்த விவகாரத்தில் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
