பெண்கள் ஒவ்வொருவரும் அரசு தூதுவராக இருந்து மக்களிடையே அரசு திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என காட்பாடியில் துணை முதலமைச்சர் உதயநிதி பேசியுள்ளார்.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் திமுக நிர்வாகி இல்ல திருமணத்தை துணை முதலமைச்சர் உதயநிதி நடத்தி வைத்தார். அப்போது பேசிய அவர், காட்பாடியில் திருமணத்தை நடத்தி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமிட்டு பிள்ளையார் சுழி போட்டது காட்பாடி தொகுதி. நான் இங்கு வந்து மணமக்களை வாழ்த்துவதற்கு முழு முதற் காரணம் பொதுச்செயலாளர் துரைமுருகன்தான்.
இங்கே நிறைய பெண்கள் வந்திருப்பதை பார்க்கிறேன். ஒரு காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள். பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் கண்ட கனவு தான் இது. பெண்கள் படிக்கவும் சுதந்திரமாக இருக்கவும் திட்டத்தை தீட்டியவர் கலைஞர். அதனை செய்து காட்டியவர் நமது முதலமைச்சர். பெண்கள் படிக்க வேண்டும் பொருளாதார ரீதியாக வளர வேண்டும்.
ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தில் ஒவ்வொரு பூத்திலும் இல்லை 30% வாக்காளர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இங்கு வந்துள்ள ஒவ்வொருவரும் அரசு தூதுவராக இருந்து மக்களிடையே அரசு திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.