சென்னை தலைமைச் செயலகத்தில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.

குறிப்பாக, முதலமைச்சர் அலுவலக நுழைவாயில் அருகில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 17 கோடியே 65 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 198 வாகனங்களை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சேவையினை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

மேலும், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற 2 கோடியே 15 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர் முனைவர் ம. இராசேந்திரனிடம் முதலமைச்சர் வழங்குகிறார்.

அதேபோல், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 63 திருக்கோயில்களை அதன் பழமை மாறாமல் புனரமைக்கும் வகையிலான திருப்பணிகளை முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 72 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 99 கோடியே 35 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 403 வகுப்பறைகள், 54 கழிவறைகள், 13 ஆய்வகங்கள், 2 குடிநீர் வசதிகள் என 472 முடிவுற்ற பணிகளை திறந்து வைப்பதோடு, பள்ளிக் கல்வித் துறை சார்பில் “உலகப் பொதுமறை திருக்குறள்” (TIRUKKURAL- Treasure of Universal Wisdom) என்னும் நூலினை முதலமைச்சர் வெளியிடுகிறார். இந்நூலினை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தனது முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் கீழ், சிகாகோ உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையுடன் சேர்ந்து கூட்டு வெளியீடாக வெளியிடப்பட உள்ளது.

இதில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், துறை சார்பான செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version