பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தபோதும், ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பகுதி நேரம் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து 19வது நாளாக போராட்ட்ம நடத்தி வருகின்றனர். தொடர்ந்து போராடி வரும் ஆசிரியர்களை போலீசார் கைது செய்த சம்பவங்களும் அரங்கேறின.
தொடர்ந்து ஆசிரியர்கள் போராட்ட த்தில் ஈடுபடுவதும், அவர்களை போலீசார் கைது செய்வதும் வாடிக்கையாக நடந்து வந்தது. தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அரசு இருப்பதற்கு கண்டனம் தெரிவித்த ஆசிரியர்கள், பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லாமல் போராடுவோம் என்றும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை முகாம் அலுவலகத்தில் ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பொங்கல் நாளில் ஆசிரியர்கள் போராடுவது வேதனை அளிப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12,500ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். பகுதி நேர ஆசிரியர்களுக்கு 12 மாதங்களாக வழங்கப்படாமல் இருந்த மே மாத ஊதியமும் வழங்கப்படும் என தெரிவித்தார்.
அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு, ஊதிய உயர்வை கேட்கவில்லை, பணி நிரந்தரம் வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
