சுற்றுலாப் பயணிகள் காலி மதுபாட்டில்களை வனம் மற்றும் மலைப் பிரதேசங்களில் வீசுவதால், வனவிலங்குகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதைத் தடுக்க மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மது பாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்பனை செய்து, காலி பாட்டில்களை திரும்ப தரும் பட்சத்தில், 10 ரூபாயை திருப்பி தரும் வகையிலான திட்டத்தை அமல்படுத்தும்படி, சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருந்தது.

சுற்றுச்சூழல் தொடர்பான இந்த வழக்கு, நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் டி. பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “தமிழகத்தில் மூன்று மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளிலும் இந்தத் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இனிவரும் காலங்களில், இந்த நடைமுறையை முழுமையாக மாற்றியமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, காலி பாட்டில்களைச் சேகரிக்கும் பணியில் டாஸ்மாக் பணியாளர்களை ஈடுபடுத்தாமல், மாற்று வழிகள் மூலம் இதைச் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், “கூடுதலாக வசூலிக்கப்படும் ரூ.10 கட்டணத்தை முறையான விற்பனை ரசீதில் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும். இந்த நடைமுறையைச் சாதகமாக்கிக்கொண்டு, வாடிக்கையாளர்களிடம் சட்டவிரோதமாகக் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது” என்று அறிவுறுத்தினர்.

இதற்குப் பதிலளித்த தலைமை வழக்கறிஞர், “அரசு ஊழலை ஒருபோதும் அனுமதிக்காது, இதில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று விளக்கமளித்தார்.

இறுதியாக, இத்திட்டத்தை மாற்றியமைப்பது குறித்த ஆரம்பக்கட்ட அறிக்கை 4 வாரங்களிலும், முழுமையான அறிக்கை 8 வாரங்களிலும் தாக்கல் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version