ஆயிரம்கோடி ரூபாய் டாஸ்மாக் முறைகேடு வழக்கில், திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் ஆவணங்களை நாளை (ஜூன் 18, 2025) தாக்கல் செய்யும்படி அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்குத் தடை விதிக்கவும், சீலை அகற்றவும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், எதன் அடிப்படையில் இருவரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது என்பதற்கான காரணங்களை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்தார்.
அதை ஆய்வு செய்த நீதிபதிகள், “இதில் உள்ள தகவல்கள் போதுமானதாக இல்லை” எனக் கூறி, முறைகேட்டில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
வீடு சீல் வைக்கப்பட்டதா? நீதிபதிகளின் கேள்விகள்:
“வீட்டை சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லாதபோது எப்படி சீல் வைக்கப்பட்டது?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், “வீடு சீல் வைக்கப்படவில்லை. எங்களைத் தொடர்பு கொள்ளாமல் கதவைத் திறக்க வேண்டாம் என நோட்டீஸ் மட்டுமே ஒட்டப்பட்டது” எனக் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அப்படி என்றால் அதற்கு என்ன அர்த்தம்? தன்னுடைய வீட்டுக்குள் செல்ல அவர் அமலாக்கத்துறையிடம் அனுமதி பெற வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், அந்த நோட்டீஸை அகற்றிவிடுவதாகக் கூறினார். “நோட்டீஸ் ஒட்ட அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லாத நிலையில், சட்டவிரோதமாகச் செய்யப்பட்ட ஒன்றை சட்டப்பூர்வமானதாக மாற்ற வேண்டாம்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆகாஷ் பாஸ்கரன் தரப்பு வாதம்:
ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “2014 முதல் 2021 ஆம் ஆண்டு வரை முறைகேடு நடந்ததாகக் கூறி பார் உரிமையாளர்கள், விற்பனையாளர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் அந்தக் காலகட்டத்தில் ஆகாஷ் பாஸ்கரன் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார்” என்று வாதிட்டார்.
இதனையடுத்து, வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்களின் தொடர்புகளுக்கான ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு மீண்டும் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நாளை (ஜூன் 18, 2025) நடைபெற உள்ள நிலையில், அமலாக்கத்துறை தாக்கல் செய்யவுள்ள ஆவணங்கள் வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.