டாஸ்மாக் பணியாளர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து அதன் மீது தீர்வு கண்டு அதன் பிறகு சீரமைப்பு பணிகள் செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
டாஸ்மாக் தொழிற்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், சட்டமன்றத் தேர்தலில் மக்களின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று, மற்ற கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்த முதல்வர் விஜய்க்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ஏ.ஐ.டி.யு.சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வழிபாட்டுத் தளங்கள், கல்விக் கூடங்கள், பேருந்து நிலையங்களில் இருந்து சுமார் 500 மீட்டர் இடைவெளியில் உள்ள சுமார் 717 மதுபான கடைகள் மூட உத்தரவு வழங்கப்பட்டதை தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ஏ.ஐ.டி.யு.சி வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த 717 கடைகளை மூடுவதால் பல்வேறு பிரச்சனைகள் எழுவதாகவும், எவ்வித சட்டத்திருத்தம் கொண்டு வராமல் தற்போது தமிழக முதலமைச்சர் விஜய், 500 மீட்டர் எல்லையை நிர்ணயம் செய்து கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு வழங்கியதால் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் செயல்பட்டு வரும் சுமார் 3000 மதுபானக் கடைகளை மூட வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ய ஏதுவாக அமையும் சூழலால், காவல்துறை கூடுதல் கவனம் எடுக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உதாரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது செயல்பட்டு வரும் சுமார் 124 கடைகளில் 500 மீட்டர் எல்லைக்குள் 63 கடைகள் மூடப்படும் பட்டியலில் உள்ளதாகவும், அதனை மூடிய பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் 61 கடைகள் மட்டும் செயல்படும் போது பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.
அதே சமயம் மூடிய கடைகளில் பணிபுரியும் பணியாளர்களை அரசின் பிற துறைகளில் உள்ள காலி பணியிடங்களில் பணிபுரிய உத்தரவு வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ஏ.ஐ.டி.யு.சி-யின் சார்பிலும் மற்றும் பிற சங்கங்கள் அரசியல் கட்சிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது என்று சுற்றறிக்கை வெளியான நிலையில் இளைஞர்கள் உட்பட பல்வேறு நபர்கள் தொலைபேசி மூலம் படம் பிடித்து கடை பணியாளர்களை மிரட்டி அச்சுறுத்தி வருவதால், கடைகளில் பணியாற்ற இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள மதுபான விற்பனை நடைமுறையை டாஸ்மாக் நிறுவனம் பின்பற்ற தமிழக அரசு உத்தரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

உடைந்த மதுபாட்டில்களுக்கு கடை ஊழியர்கள் அந்த தொகையை செலுத்தி வருவதாகவும், காலி பாட்டில்களை வைப்பதற்கு மாத வாடகையை கடை பணியாளர்கள் அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற பல்வேறு செலவினங்கள் கடை பணியாளர்கள் செய்து வருவதை தவிர்க்க புதிய அரசு ஏற்பாடு செய்து, மதுபானங்கள் MRP விலைக்கு விற்பனை செய்யும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாக பணியாளர்களை பணிநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
