இந்தியாவில் இந்த ஆண்டுக்கான தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட சற்று முன்கூட்டியே தொடங்கியுள்ளது. கடந்த மே 16-ம் தேதியே அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் சில பகுதிகளில் நுழைந்த பருவமழை, தற்போது அடுத்தடுத்த பகுதிகளுக்கு விறுவிறுப்பாக பரவி வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து, பருவமழைக்கான சாதகமான சூழல் உருவாகி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, நேற்றைய நிலவரப்படி தெற்கு அரபிக்கடலின் சில பகுதிகள், லட்சத்தீவுப் பகுதி, தெற்கு மற்றும் கிழக்கு-மத்திய வங்காள விரிகுடா ஆகிய பகுதிகளில் பருவமழை முழுமையாகப் பரவியுள்ளது. மேலும், அந்தமான் கடல் பகுதி மற்றும் ஒட்டுமொத்த அந்தமான் நிக்கோபார் தீவுகள் முழுவதையும் உள்ளடக்கி, பருவமழை தீவிரமாக நிலைபெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டமாக, வரும் 2 முதல் 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேறிச் செல்வதற்கு மிகச் சாதகமான சூழல் நிலவுகிறது. குறிப்பாக, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலின் எஞ்சிய பகுதிகள், லட்சத்தீவு, தென்மேற்கு, கிழக்கு-மத்திய, மேற்கு-மத்திய வங்காள விரிகுடா மற்றும் வடகிழக்கு வங்காள விரிகுடாவின் சில பகுதிகளுக்குள் பருவமழை அடுத்தடுத்து தீவிரமாக நுழையும் என வானிலை மையம் கணித்துள்ளது.
