நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் திரு.வி.க.நகர் தொகுதியில் களமிறங்குகிறார். அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், “திருமதி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் மிகுந்த துணிச்சலோடு பொது வாழ்விற்கு வந்திருப்பதை நான் வரவேற்கிறேன். ஆம்ஸ்ட்ராங் மறைவிற்குப் பிறகு, அவரது அரசியல் பணியைத் தொய்வின்றித் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் களமிறங்கியிருப்பது பாராட்டிற்குரியது. பொற்கொடிக்குச் சமூகத்திலும் அரசியலிலும் உரியப் பாதுகாப்பும், அங்கீகாரமும் தேவை. அதனைப் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வழங்கியிருப்பதை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

திருமாவளவனின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கவலை தெரிவித்த திருமாவளவன், அவருக்கு அரசியல் களம் ஒரு பாதுகாப்புக் கவசமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாகப் பேசுவது போலத் தோன்றும் இக்கருத்து, திமுக தரப்பிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. விசிக-திமுக கூட்டணியில் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சி வேட்பாளரின் அரசியல் வருகையைத் திருமாவளவன் வெளிப்படையாக ஆதரிப்பது, வரும் தேர்தலில் திரு.வி.க. நகர் தொகுதி முடிவுகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற விவாதத்தை அரசியல் விமர்சகர்களிடையே கிளப்பியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version