சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விசிக தலைவர் திருமாவளவன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”வெறும் ஜாதி அரசியலையும், மத அரசியலையும், ஜாதி பெருமிதங்களையும், மத பெருமிதங்களையும் அரசியலாக இங்கு மக்கள் மத்தியில் அள்ளி இறைத்து கொண்டு இருப்பவர்கள் மத்தியில், இடதுசாரி பார்வை கொண்ட கருத்தியல், இந்த மண்ணுக்கு தேவை. தேசிய அளவில் அது வலிமை பெற வேண்டும். அதற்கு தேசிய பார்வையும் தேவை என்கிற அடிப்படையில் இயங்கும் இயக்கம் தான் விடுதலை சிறுத்தை கட்சி.
அதனால் தான் எல்லோரும் தேர்தல் கணக்கு போடுகிற போது, நாம் தேசத்தின் பாதுகாப்பை பற்றி, கவலைப்பட்டு கொண்டு இருக்கிறோம். பேரணி நடத்தி கொண்டு இருக்கிறோம். எத்தனை இடங்களில் நீங்கள் போட்டியிட போகிறீர்கள் என்று திரும்ப, திரும்ப கேள்வி கேட்கிறார்கள். பாவம் அவர்களுக்கு இன்னும் சிறுத்தைகளை மதிப்பிட தெரியவில்லை. திருமாவளவனை மதிப்பிட செய்ய முடியவில்லை என்பது தான் என்னுடைய பார்வை.
ஏதோ திருநீற்றை அழித்துவிட்டான் திருமாவளவன் என்று அரசியல் பேசுகிறார்கள். எப்படியாவது எங்களை பற்றி பேசி கொண்டே இருங்கள். எதிராகவோ, ஆதரவாகவோ எங்களை பற்றி பேசிக் கொண்டே இருங்கள். ஏனென்றால் நாங்கள் தேசத்தை திருப்பி அமைப்பதற்காக, புதுப்பித்து கட்டமைப்பதற்காக, புதிய இந்தியாவை உருவாக்குவதற்காக, அம்பேத்கரின் கனவை நனவாக்குவதற்காக போராடி கொண்டு இருப்பவர்கள். எங்களை வெறும் டீ, பன் கொடுத்து ஏமாற்றிவிடலாம் என்று நீங்கள் கணக்கு போடாதீர்கள்.
நாங்கள் 6 சீட் கொடுத்தோம். 8 சீட் கொடுத்தோம். அதற்கு மேல், அவர்களை நாங்கள் ஊக்கப்படுத்தவில்லை. நாங்கள் 10 சீட்டுக்கு மேல் இவர்களுக்கு எப்போதுமே தரமாட்டோம். அது உங்கள் மதிப்பீடு. இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை. வெறும் தேர்தல் கணக்கில் சொல்லவில்லை. சமூக மாற்றத்தின் பார்வை அடிப்படையில் சொல்கிறேன்” எனக் கூறினார்.