தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஆளும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் கருத்து கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்பபடுத்தும் விதமாக விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு எனக் கூறியதும், பிரவீன் சக்ரவர்த்தி தவெக தலைவர் விஜயை சந்தித்து அக்கட்சி குறித்து கூறிய கருத்து ஆகியவை கடந்த சில நாள்களாக பரபரப்பை கிளப்பியுள்ளன.
இதேபோல், பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் காரணமாக பாமக தலைவர் அன்புமணி – நிறுவனர் ராமதாஸ் இடையேயான முரண்பாடு, தேர்தலுக்குள் முடிவுக்கு வர வாய்ப்பில்லை என்றே பார்க்கப்படுகிறது. இருதரப்புமே தேர்தல் முடிவை நான்தான் எடுப்பேன் என உறுதியாக இருப்பதே மோதல் நீடிப்பதற்கு காரணம். இந்தச் சூழலில் இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கூட்டணி கட்சிகளுக்கு உள்ளது. அந்த வகையில் அன்புமணியை பாஜக- அதிமுக கூட்டணி தேர்வு செய்துள்ளது. இதனால், கொதிப்படைந்து போய் உள்ளார் ராமதாஸ்.
இந்நிலையில், ராமதாஸை திமுக கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், விசிக உள்ளே இருப்பதால் திமுக கூட்டணிக்குள் வரக்கூடிய வாய்ப்பு இருக்குமா எனவும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ‘‘பாமக இடம்பெறும் எந்த கூட்டணிகளும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெறாது. இது இன்றைய முடிவு அல்ல. 14 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட தீர்மானம்’’ என்று திருமாவளவன் தெளிவாக கூறியிருக்கிறார். இதுதான் திமுகவுக்கு சிக்கலாகிறது. அப்படி என்னதான் 14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது?
இந்த விரிசலுக்கான வேர்கள் 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமகவும், விசிகவும் ஒரே கூட்டணியில் போட்டியிட்டனர். ஆனால், அந்த கூட்டணி வெற்றி பெற்றது. அந்த தேர்தலுக்கு பிறகு பாமக விசிகவை இணைப்பது திமுகவுக்கு எந்த அரசியல் பலனைகள் தரவில்லை என்ற கருத்து திமுக தரப்பில் மட்டுமல்ல அரசியல் வட்டாரங்களிலேயே பரவலாக பேசப்பட்டது. பாமக மற்றும் விசிக இடையே கருத்து மோதல்களும் தீவிரமடைந்தே வருகிறது.
2012 ஆம் ஆண்டு தர்மபுரி கலவரம், 2013 ஆம் ஆண்டு மரக்காணம் கலவரம் போன்ற சம்பவங்கள் இரு கட்சிகளுக்கு இடையேயான உறவை முற்றிலுமாக பதற்றமடைய வைத்தது. வன்னியர் சமூகத்தை பிரதிநிதிப்படுத்தும் கட்சியாக பாமகவும், தலித் மக்களின் அரசியல் குரலாக விசிகவும் நேரடியாக மோதும் நிலை உருவானது. இதற்கு முன்பு வரை ராமதாஸும், திருமாவளவனும் தமிழ் மொழி, ஈழப் பிரச்சனை, சமூக நீதி போன்ற பல விஷயங்களில் ஒரேமேடையில குரல் கொடுத்தவர்களதான். ஆனால் 2011க்கு பிறகு அவர்கள் அரசியல் ரீதியாக எதிரெதிர் துருவங்களாக மாறிவிட்டனர். அதன் பிறகு நடந்த எந்த நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் பாமகவும், விசிகவும் ஒரே கூட்டணியில் இடம் பெறவில்லை. இந்த பின்னணியில்தான் பாமக இருக்கக்கூடிய கூட்டணியில் விசிக இருக்காது என்று திருமாவளவனின் உறுதியான நிலைப்பாடு உருவானது.
இந்தநிலையில், நேற்று தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, கூட்டணி விவகாரத்தில் ராமதாஸ், திருமாவளவன் இருவரும் அமர்ந்து பேசவேண்டும் எனவும் திமுக தலைமையே கூட்டணி குறித்து முடிவெடுக்கும் என்று கூறியிருந்தார். இதற்கு எம்.எல்.ஏ. பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது, கூட்டணி நிலைப்பாட்டை விசிக மாற்றிக்கொள்ளும் என்கிற தோற்றத்தை திணிப்பது நாகரீகமற்ற அணுகுமுறை என்றும் செல்வப்பெருந்தகையின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால், மற்ற விசிக நிர்வாகிகளும் அப்செட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது
