திருவள்ளூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இதுவரை 10 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஆந்திர எல்லையில் தேடுதல் வேட்டை மற்றும் சவால்கள்
குற்றச் சம்பவம் பதிவான இடம் தமிழ்நாடு-ஆந்திரா மாநில எல்லை என்பதால், ஆந்திராவில் விசாரணை நடத்துவதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளன. நேற்று ஆந்திரா சென்ற தனிப்படை போலீசாருக்கும், ஆந்திர மாநில மீனவ கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குற்றவாளியின் புகைப்படம் கிடைத்த பின்னரும், அது ஆந்திர மாநில காவல் துறைக்கு அனுப்பப்படாததால், தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இது ஆந்திராவில் குற்றவாளியைத் தேடுவதை மேலும் சவாலாக்கியுள்ளது.
சந்தேக நபர் விசாரணை
இன்று காலை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குடிபோதையில் விழுந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்வாகு, தோற்றம் மற்றும் உடைகள் குற்றவாளியின் விளக்கத்துடன் ஒத்துப் போனதால், தனிப்படை போலீசார் அவரிடம் நேரில் விசாரணை நடத்தினர்.
பின்னர், அந்த இளைஞரின் புகைப்படத்தை பாதிக்கப்பட்ட சிறுமியிடம் காட்டி விசாரணை நடத்தப்பட்டதில், குற்றவாளி இந்த நபர் அல்ல என சிறுமி தெரிவித்துள்ளார்.