திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில், பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் அந்த இளைஞரின் சகோதரர் கடத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் கடத்தல் வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பெண்ணின் தந்தை உள்பட ஐந்து பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த பூவை ஜெகன்மூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சிறுவன் கடத்தல் சம்பவத்தில் ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமனுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.
நேற்று பிற்பகல் ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, இந்தக் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்குப் போதிய முகாந்திரம் இருப்பதால் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சீருடையில் இருந்த ஏடிஜிபி ஜெயராமனை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனிடம் திருத்தணி டிஎஸ்பி அலுவலகத்தில் விடிய விடிய விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய தமிழக அரசுக்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. ஏடிஜிபி ஜெயராமன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், அதற்கு முன்பாக அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.