கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ​இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகளைத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முரளிதரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அவருடன் கட்சி ஒன்றியக் கழகச் செயலாளர் வெங்கடேசன் உடனிருந்தார். நிர்வாகிகள்  பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, மழையால் சேதமடைந்த பயிர்களையும், பொதுமக்களின் வாழ்வாதாரப் பாதிப்புகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த தவெக நிர்வாகிகள், “இந்தப் பாதிப்புகள் குறித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் இழப்பீடும், உரிய நிவாரண உதவிகளும் விரைந்து கிடைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தவெக சார்பில் மேற்கொள்ளப்படும்” என்று உறுதியளித்தனர்.

​மேலும், “இந்த பேரிடர் சூழலில் பொதுமக்கள் யாரும் அச்சப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும். கழகத்தின் சார்பில் மக்களுக்குத் தேவையான கள உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும்” என்றும் அவர்கள் தெரிவித்தனர். ​இந்த ஆய்வின் போது தவெக உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version