தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா, பரமன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கோபி. இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவர் ஏரல் பகுதியை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான சொத்தினை ரூ.90லட்சத்திற்கு விலை பேசியதாக கூறப்படுகிறது.
இதற்காக முதற்கட்டமாக ரூ.72லட்சத்தை முன்பணமாக கோபி செலுத்தியுள்ளார். இதனை பெற்றுக் கொண்ட ராஜா மற்றும் அவரது மனைவி பொன்தெய்வம் இருவரும், மீதித் தொகை ரூ.18லட்சத்தை வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் வழங்கி கிரைய ஆவணம் செய்து கொள்ள வேண்டும் என ஒப்பந்தம் செய்துள்ளனர்.
வங்கி கணக்கில் ரூ.72 லட்சம் பணம் ஏறியவுடன், ராஜா மற்றும் அவரது மனைவி பொன்தெய்வம் ஆகியோர் சொத்தை கிரயம் செய்து தராமல் கோபியுடனான தொடர்பை துண்டித்துள்ளனர். மேலும் தங்கள் வீட்டை பூட்டி விட்டு, ஊரை காலி செய்து தலைமறைவாகினர். இதனால் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டப் போது முன்னுக்குப் பின் முரணாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
தான் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோபி, இது குறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில், ஏரலை சேர்ந்த ராஜா மற்றும் அவரது மனைவி பொன்தெய்வம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பண மோசடியில் ஈடுபட்ட ராஜா தமிழக வெற்றி கழகத்தின் நகர செயலாளர் என்பது தெரியவந்துள்ளது.
