திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 333.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 377 திட்டப்பணிகளை திறந்து வைத்து,  137.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 211 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,12,294 பயனாளிகளுக்கு 1000.34 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி சுந்தரசோழபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 333.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 377 திட்டப்பணிகளை திறந்து வைத்து,  137.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 211 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,12,294 பயனாளிகளுக்கு 1000.34 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
“திருவள்ளுர் மாவட்டத்தில் இன்றைக்கு மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளுக்கு சுமார் 1,500 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நம்முடைய முதலமைச்சர் வழங்க சொல்லியிருக்கிறார்கள். அதில், சுமார் 325 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை இன்றைக்கு திறந்து வைத்திருக்கின்றோம், 137 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பணிகளை இன்றைக்கு தொடங்கி வைத்திருக்கின்றோம்.
இங்கே ஒரு முக்கியமான விஷயத்தை உங்களிடம் நான் குறிப்பிட்டு சொல்லவேண்டும். இந்தியாவிலேயே நீர்நிலையில் தன்னிறைவு பெற்ற ஒரு ஊராட்சியாக, இந்த மாவட்டத்தில் உள்ள பாலாபுரம் ஊராட்சி, ஒன்றிய அரசின் விருதை சமீபத்தில் பெற்றுயிருக்கின்றீர்கள்.
அதற்காக உழைத்த மாவட்ட நிர்வாகத்துக்கும், அரசு அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும், இதனை சாத்தியப்படுத்த ஒத்துழைத்த பொது மக்களுக்கும், குறிப்பாக பாலாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் அத்தனைபேருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்றைக்கு இங்கே 50 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழு சகோதரிகளுக்கு  அடையாள அட்டையும் கொடுக்க இருக்கின்றோம். நான் ஒவ்வொரு மாவட்டத்திலும், மகளிர் குழு சகோதரிகளிடம் பேசும் போது, என்னிடம் சொல்லுவார்கள். “அண்ணா, Software-ல் வேலை செய்தால் மட்டும் தான் அடையாள அட்டை கொடுப்பீர்களா, சாதிக்க வேண்டும் என்று வேலை செய்கின்ற எங்களுக்கும் அடையாள அட்டை கொடுக்க மாட்டீர்களா என்று அந்த குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் உரிமையோடு கேட்டார்கள்.
அந்த கோரிக்கையை முதலமைச்சரிடம் சொன்னவுடனே, முதலமைச்சர் போட்ட உத்தரவு, இன்றைக்கு இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இந்த திட்டம் கிடையாது.  மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த அத்தனை சகோதரிகளுக்கும், அவர்கள் புகைப்படத்துடன் சேர்ந்து அடையாள அட்டை கொடுக்கப்பட்டிருக்கிறது.
நம்முடைய முதலமைச்சர் கூறியது, அடையாள அட்டை கொடுத்தால் மட்டும் போதாது, அந்த அடையாள அட்டை மூலமாக அவர்களுக்கு பல்வேறு பயன்களும் கிடைக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
இதன் மூலமாக, குழு சகோதரிகள், உங்களுடைய தயாரிப்பு பொருட்களை வேறு ஊர்களுக்கு சென்று விற்க வேண்டும் என்றால், 25 கிலோ வரைக்கும் அரசு பேருந்துகளில் 100 கிலோமீட்டர் தூரத்திற்கு எந்தவித கட்டணமும் இல்லாமல்  நீங்கள் எடுத்து செல்லலாம். இதன் மூலம் உங்களுக்கு வருகின்ற வருமானமும், இலாபமும் இன்னும் அதிகமாக இருக்கும்.
நம்முடைய ஆட்சி அமைந்த பிறகு குழு சகோதரிகளுக்கு
ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவில் வங்கிக் கடன் இணைப்புகளும் வழங்கப்பட்டு இருக்கிறது. குழுவின் தயாரிப்பு பொருட்களுக்கு நல்ல மார்க்கெட்டிங் செய்கின்றோம், அதை பொது மக்களும் விரும்பி வாங்கி செல்கின்றார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, மதுரையில் குழு சகோதரிகளுக்கான SARAS MELA விற்பனை கண்காட்சியையும், உணவுத்திருவிழாவையும் நான் திறந்து வைத்தேன். இப்படி குழுவில் இருக்கக்கூடிய சகோதரிகளுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டினுடைய ஒட்டு மொத்த மகளிருக்கும் ஏராளமான திட்டங்களை நம்முடைய அரசு செய்து கொண்டிருக்கிறது.
உதாரணத்திற்கு விடியல் பயணத் திட்டம், நான்கரை வருடங்களுக்கு முன்பு நம்முடைய ஆட்சி பொறுப்பு வந்தவுடன், நம்முடைய முதலமைச்சர் போட்ட முதல் கையெழுத்து, இங்கு வந்திருக்கக்கூடிய மகளிர் உங்களுக்கான  கையெழுத்து, அதுதான் விடியல் பயணத் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மகளிரும் மாதம் 900 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை சேமிக்கின்றார்கள் என்று புள்ளிவிபர கணக்குகள் சொல்கின்றது.
அதுமட்டுமல்ல, குழந்தைகள் பயன்பெறுகின்ற முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்.  குழந்தைகள் படிக்க வேண்டும், உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கொண்டு வந்த திட்டம், புதுமைப் பெண் திட்டம். இது எல்லாவற்றிக்கும் முத்தாய்ப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். ஒவ்வொரு மாதமும் 1 கோடியே 15 இலட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் நம்முடைய முதலமைச்சர் உரிமைத் தொகையாக கொடுத்துக்  கொண்டிருக்கிறார்கள்.
மகளிர் உரிமைத் தொகை எப்போது?
சில இடங்களில் சில குறைகள் இருந்தது. எங்களது பேர் விட்டுப்போனது என்று, சமீபத்தில் நடந்த முகாம்களில் அதிகமாக பெறப்பட்ட மனுக்கள் இந்த உரிமைத் தொகைக்காகதான். நான் சட்ட சபையில் முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில், அறிவித்தேன். வருகின்ற டிசம்பர் 15 ஆம் தேதி முதல் விடுபட்டுள்ள சில மகளிருக்கும் நிச்சயம் அந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவுபடுத்தப்படும் என்ற வாக்குறுதியை கொடுத்திருக்கின்றேன். வருகின்ற டிசம்பர் 15 ஆம் தேதி அனைத்து மகளிருக்கும் மாதம் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிச்சயம் வந்து சேரும்.
இப்படி பெண்கள், திருநர்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் என்று அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்காகவும்  நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அரசு எப்படி உங்களுக்கெல்லாம் ஆதரவாக இருக்கின்றதோ, உங்களுக்காக செயல்படுகின்றதோ, அதே மாதிரி இந்த அரசுக்கு நீங்கள் ஆதரவாக இருக்கவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.
உங்களுக்காக இன்னும் அதிகமாக உழைப்பதற்காக நம்முடைய முதலமைச்சரும், நம்முடைய அரசும் தயாராக இருக்கின்றது. ஆகவே, திராவிட மாடல் அரசு தொடர நீங்கள் அத்தனைபேரும் நம்முடைய அரசிற்கு துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, நலத்திட்ட உதவிகளைப் பெற்ற அத்தனைப் பேருக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version