அயோத்தி ராமர் கோயில் கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பத்தின் மீது பிரதமர் மோடி கொடியேற்றி வைத்தார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டும் பணி கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. பணிகள் நிறைவடைந்து, கடந்தாண்டு ஜனவரி 22ம் தேதி பக்தர்கள் வழிபாட்டுக்காக கோயில் திறக்கப்பட்டது. விமர்சையாக நடைபெற்ற பிராண பிரதிஷ்டை விழா பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.
இதனிடையே ராமர் கோயிலின் 191 அடி உயரமுள்ள பிரதான கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தின் மீது பிரதமர் மோடி இன்று (நவ. 25) கொடியேற்றி வைத்தார். 20 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைத்தார். இந்தக் கொடியில் ஸ்ரீராமரின் வீரம் மற்றும் பெருமையை குறிக்கும் விதம் ஒளிரும் சூரியன் மற்றும் ஓம் மற்றும் மந்தாரை மரம் போன்ற புனிதச் சின்னங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. கண்ணியம், ஒற்றுமை, கலாச்சார தொடர்ச்சி ஆகியவற்றை உணர்த்துவதுடன், ராம ராஜ்ஜியத்தின் லட்சியங்களை இந்த கொடி குறிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் அயோத்தி வந்த பிரதமர் மோடியை உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். பின்னர், சாலை வலம் சென்ற சென்ற பிரதமர் மோடிக்கு சாலையின் இருபுறமும் திண்டிருந்த மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
இதையடுத்து, சேஷாவதார ஆலயம், அன்னபூரணி தேவி ஆலயம் மற்றும் சப்த ஆலயம் ஆகியவற்றில் பிரதமர் மோடி சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் ராமர் கோயிலுக்கு சென்ற பிரதமர், மூலவர் பால ராமரை தரிசித்தார்.
இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்கள் தரிசனத்திற்கு இன்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் விழாவைக் காண ராமஜென்ம பூமி வளாகம் மற்றும் அயோத்தி நகரில் பல்வேறு இடங்களில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டன.
