எம்.எல்.ஏ-க்களை பதவி விலகச் செய்ய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக வைகோவின் ஒப்புதல் அடிப்படையில், ஆர்.எஸ். பாரதி ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார்.
கவர்னருக்கு தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. T.M. ராஜேந்திரன் மற்றும் சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. S. செந்தில் செல்வன் ஆகிய இருவரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்குப் பெரும்பான்மை இல்லாததால், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் அவர்கள் இருவரையும் பதவி விலகச் செய்ய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களுடன் இணைந்து மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கூட்டுச் சதியில் ஈடுபட்டதை வைகோ அவர்களே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இத்தகைய குதிரை பேரத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே நேரடியாக ஈடுபட்டுள்ளதால் அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
