தமிழக அரசியலின் முக்கியத் தளங்களில் ஒன்றான கோபிசெட்டிபாளையம் தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியுள்ள செங்கோட்டையன், தனது வெற்றி குறித்து நெகிழ்ச்சியான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகம் முழுவதும் தவெக படைத்து வரும் இந்த இமாலய சாதனை என்பது தனிப்பட்ட வேட்பாளர்களின் வெற்றி அல்ல, அது தலைவர் விஜய் மீது மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்குக் கிடைத்த அங்கீகாரம் என்று குறிப்பிட்டார். 234 தொகுதிகளிலும் நின்ற வேட்பாளர்களைக் கடந்து, மக்கள் ஒவ்வொரு இடத்திலும் விஜய்யையே நேரடியாகத் தங்கள் வேட்பாளராகக் கருதி வாக்களித்திருப்பதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் நிலவி வந்த பாரம்பரிய அரசியல் கோட்டைகளை ‘விஜய்’ எனும் ஒற்றை பிம்பம் தகர்த்தெறிந்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, கோபிசெட்டிபாளையம் மக்கள் எவ்வித எதிர்பார்ப்புமின்றி மாற்றத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தவெக-விற்குத் தங்களது பேராதரவை வழங்கியிருப்பதாக அவர் நெகிழ்ந்து கூறினார். தலைவர் விஜய்யின் வழிகாட்டுதலின் கீழ், மக்கள் நலத்திட்டங்கள் இனி முழு வீச்சில் செயல்படுத்தப்படும் என அவர் உறுதியளித்தார். செங்கோட்டையனின் இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், தொகுதி முழுவதும் தொண்டர்கள் விசில்களை ஊதி, ‘தளபதி’ கோஷங்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
