கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் பருவமழை பெய்யத் தொடங்கிய நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஒகேனக்கல் அருவி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளான கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ் அணையின் நீர்மட்டம் 121அடியாக உள்ளது. நீர் இருப்பு 44.322 டி.எம்.சியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 52,829கன அடியாக உள்ளது.

இதனால் இரு அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு அதிகளவு நீர் வெளியேற்றப்படுகிறது. கே.ஆர்.எஸ் அணையில் இருந்து மட்டும் 51,000கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 30,000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் ஒகேனக்கலுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆகையால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியாக உள்ளது. நீர் இருப்பு 84.22 டி.எம்.சி.,யாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 43,890 கனஅடியாக இருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 22,000 கன அடி தண்ணீர் காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version