திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் நீண்ட கால முரண் இருந்துவருவதாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனாலும் இரண்டு தரப்பின் மேலிட தலைவர்களும் கூட்டணி முரண்களை பேசி வருகின்றனர். ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசை முறையாக நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டை பலமுறை பொதுவெளியில் மாணிக்கம் தாகூர் எழுப்பியிருக்கிறார். இது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் காங்கிரசின் அதிகாரப்பகிர்வு கோரிக்கையை திமுக தொடர்ந்து மறுத்து வருகிறது.
இருப்பினும், நேற்று மதுரை திருப்பரங்குன்றத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக அமைச்சரவையில் காங்கிரஸுக்கும் பங்கு அளிக்கப்படவேண்டும், அதிகப்படியான தொகுதிகளை பெறவேண்டும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் 30% இடங்களை பெறவேண்டும் உள்ளிட்ட அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆனாலும் இதற்கு பிடிக்கொடுக்காமல், திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த மாணிக்கம் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் என்றார்.
மேலும், காங்கிரஸ் கட்சியில் ஒரு வருத்தம் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் குறைக்கப்பட்டது. 41 தொகுதிகளில் போட்டியிட்ட வந்த நாங்கள் தற்போது முதன்முறையாக 25 தொகுதிக்குள் வந்தோம். கூட்டணி கட்சியில் இருந்து 2 பேர் அமைச்சர்களாக இருந்தால் என்ன தவறு. நேர்மையானவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில் என்ன பிரச்னை என்றும் தெரிவித்துள்ளார்.
