எல்நினோ பருவநிலை மாற்றத்தால் தமிழகத்தில் பாதிப்பு ஏற்பட்டால், விவசாயிகளை பாதுகாக்க தேவையான நிதியை மத்திய அரசிடம் கோர உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்தி ராஜ் தெரிவித்துள்ளார்.
எல்நினோ காலத்தில் விவசாயிகளுக்கு கூட்டுறவுத் துறை மூலம் கூடுதல் பயிர்க்கடன் வழங்க வேண்டிய சூழல் உருவாகும். அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது.
முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி விரைவில் டெல்லி சென்று மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் துறை சார்ந்த உயரதிகாரிகளை சந்தித்து, விவசாயிகளுக்கு தேவையான நிதியை வழங்குமாறு கோரிக்கை வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் தற்போது நெல் சாகுபடி பரப்பு தொடர்பான கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்திற்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தற்போது போதுமான அளவில் இருப்பதாகவும், எல்நினோவால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சமாளித்து விவசாயிகளை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் காந்தி ராஜ் கூறினார்.
