தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கான தேர்தல் மார்ச் 16-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் செய்ய மார்ச் 5-ம் தேதி கடைசி நாளாகும். தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், ஆளும் திமுக கூட்டணிக்கு 4 இடங்களும், எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணிக்கு 2 இடங்களும் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக – பாமக கூட்டணி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வலுவான கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்ளவும், பாமகவின் கோரிக்கையை நிறைவேற்றவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அதன்படி, அதிமுகவிற்கு கிடைக்கக்கூடிய 2 ராஜ்யசபா இடங்களில் ஒன்றை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிற்கு ஒதுக்க அவர் முன்வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் கூட்டணி உறவு மேலும் பலப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவிற்கு உள்ள மற்றொரு இடத்திற்கு, கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய ராஜ்யசபா உறுப்பினருமான தம்பிதுரையை மீண்டும் களமிறக்க இபிஎஸ் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. டெல்லி அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட தம்பிதுரை, கட்சியின் கருத்துக்களைத் தேசிய அளவில் கொண்டு செல்வதில் முக்கியப் பங்கு வகிப்பவர். எனவே, அவருக்கு மீண்டும் வாய்ப்பளிப்பதன் மூலம் டெல்லியில் அதிமுகவின் குரலை வலுவாக ஒலிக்கச் செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
ராஜ்யசபா வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அதிமுக தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
