உயர்கல்வி துறை அமைச்சர் கோவி செழியன் பங்கேற்ற நிகழ்ச்சியில், “மனு கொடுத்தா குப்பை தொட்டிக்கு தான் போகுது” என்று பெண் ஒருவர் ஆவேசமாக பேசினார்.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் சின்னத்தும்பூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊரகப் பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகளிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
இதேபோன்று கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் குறிச்சி, ஊராட்சியில் உள்ள பி ஆர் புரம் ஊராட்சி திருக்குவளை, கிராமத்தில் உள்ள சமுதாய கூடம் ஆகிய இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றத. முகாமில் மனு அளிக்க வந்த பெண் தங்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர் மாதம் ஒருமுறை வருவதாகவும் மின் விளக்கே எரிவது கிடையாது என்றும் கூறினார்.
புகார் செய்தால் போலீசில் பிடித்து கொடுத்து விடுவதாக மனு கொடுக்க வந்த இடத்தில் அதிகாரி மிரட்டுவதாக குற்றம் சாட்டினார். மேலும் கடந்த ஐந்து முறை கொடுக்கப்பட்ட மனுக்கள் குப்பை தொட்டிக்கு சென்று விட்டதாகும் தங்கள் வசிக்கும் பகுதியே சுடுகாடாக திகழ்ந்ததாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
அப்போது வந்த திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கும் பெண்ணுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது .சமாதானம் செய்ய வந்த காவல்துறை அதிகாரி மனுவை கொடுத்துவிட்டு செல்லுமாறு பெண்ணிடம் கூறினார். அதற்கு தாம் ஐந்து முறை மனுக்கள் கொடுத்தும் குப்பைத்தொட்டியில் சென்று விட்டதால் தான் ஆவேசப்பட்டு பேசியதாக அதிகாரியிடம் மனக்குமுறலை கொட்டினார்.
பின்னர் அமைச்சர் கோவி செழியன் பேசுகையில், ஆமை வேகத்தில் இயங்கும் அரசாங்கத்தை ராக்கெட் வேகத்தில் இயக்கம் ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்றும், மனு கொடுத்த சில மணி நேரங்களிலேயே மக்களுக்கான உதவிகளை நாகை மாவட்டத்தில் ஆட்சியர் செயல்படுத்தி வருவதாகவும் இது கம்பராமாயணமோ கட்டுக்கதையோ அல்ல என்றும் தளபதி மு க ஸ்டாலின் தலைமையிலானஆட்சி என்றும் குறிப்பிட்டார்.