கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே பெண் ஒருவர் அதிவேகமாக காரை ஓட்டிச் சென்று, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கடை வேங்கோடு பகுதியைச் சேர்ந்த லியோன் கிளாஸ்டன் என்பவரின் மனைவி கார்லின் சுஷ்மா, தனது காரில் புதுக்கடை சாலையில் அதிவேகமாகச் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு வளைவுப் பகுதியில் கார் திரும்பிய போது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ராஜேஷ்குமார் என்பவர் மீது நேருக்கு நேர் மோதியது.
அப்போது, ராஜேஷ்குமார் பல அடி உயரத்திற்கு அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டு, அருகில் இருந்த ஒரு வீட்டின் காம்பவுண்டு சுவரில் போய் விழுந்தார். இதில் அவருக்கு கை மற்றும் கழுத்து எலும்புகள் முறிந்தன. அதே நேரத்தில், மோதிய வேகத்தில் காரும் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் தலைகுப்புறக் கவிழ்ந்தது. விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜேஷ்குமாரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவலறிந்த கருங்கல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்துக்குள்ளான காரைப் பறிமுதல் செய்ததோடு, கார்லின் சுஷ்மா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
