2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ‘கரும்பு விவசாயி’ சின்னத்தில் போட்டியிடப்போவதாக இந்திய குடியரசு கட்சி தலைவர் போட்டியிடும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அறிவித்திருப்பதால் நாம் தமிழர் கட்சியினர் ஒருவித அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவரும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே இரு தினங்களுக்கு முன் சென்னை வந்திருந்தார். சென்னையில் பேசும்போது, “தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க., கூட்டணியில் எங்களது கட்சிக்கு 10 தொகுதிகள் கேட்டு உள்ளோம்; ஒருவேளை தொகுதிகள் ஒதுக்கவிட்டாலும் 51 தொகுதிகளில் எங்கள் கட்சியின் ‘கரும்பு விவசாயி’ சின்னத்தில் தனித்து போட்டியிடுவோம்” என்றார்.
ராம்தாஸ் அத்வாலேவின் இந்த அறிவிப்பு பாஜக கூட்டணியில் எந்த சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. மாறாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாம். இது குறித்து ராவணன் குடில் வட்டார தகவல் சொல்வது, “நாம் தமிழர் என்றாலே ‘கரும்பு விவசாயி’ சின்னம் தான் என்பது அனைவரின் நினைவுக்கும். கடந்த 2024 லோக்சபா தேர்தலில் அந்த சின்னத்தை பறித்து விட்டதால் ‘மைக்’ சின்னத்தில் போட்டியிட்டு மாநில கட்சி அங்கீகாரம் பெற்றோம். இருந்தாலும் ‘மைக்’ சின்னத்தில் சீமானுக்கு விருப்பம் இல்லை. அதனால் தான் ‘ஏர் கலப்பையோடு இருக்கும் விவசாயி சின்னம்’ வேண்டுமென பெற்றார். அந்த சின்னத்தில் தான் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் போட்டியிட உள்ளோம்.
இந்நிலையில் திடீரென அத்வாலேவின் கட்சிக்கு எங்களின் பழைய சின்னமான ‘கரும்பு விவசாயி’ சின்னத்தை தேர்தல் கமிஷன் வழங்கி உள்ளது. முன்னதாக, அத்வாலே கட்சி தமிழகத்தில் போட்டியிடாது இதனால் பிரச்சனை இருக்காது என நம்பினோம். ஆனால் தற்போது தீடீரென 51 தொகுதிகளில் கரும்பு விவசாயி சின்னத்தில் தனித்து போட்டியிடுவதாக அத்வாலே அறிவித்துள்ளார். இது சீமானிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே தவெகவால் எங்கள் இளைஞர் வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படும் சூழலில், எங்கள் பழைய சின்னத்தில் அத்வாலே கட்சி போட்டியிட்டால் அது மேலும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே தனது செல்வாக்கை பயன்படுத்தி அத்வாலே போட்டியிடுவதை தவிர்க்க சீமான் வலியுத்துவார் என எதிர்பார்க்கிறோம்” என்பது தான்.
மேலே சொன்னது போல, ஏற்கனவே விஜய்யால் வருமானம், வாக்கு வங்கி என இழப்பை சந்தித்து வரும் நாம் தமிழருக்கு கொஞ்சம் பலமாக இருப்பது என்பது சின்னம் தான். இப்போது அதற்க்கும் பாதிப்பு என்றால் என்னதான் செய்யும் நாதக. சீமான் இதை எப்படி சமாளிப்பார்? சீமானுக்காக விட்டுக்கொடுப்பாரா அத்வாலே? பார்க்கலாம்.
