மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை யொட்டி (பிப்ரவரி 24), பிரதமர் நரேந்திர மோடி அவருக்குத் தனது இதயப்பூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் என்றும், கருணைமிக்க தலைவராகவும், மிகச்சிறந்த நிர்வாகியாகவும் அவர் அனைவராலும் மதிக்கப்படுபவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். குறிப்பாக, ‘அம்மா’ என்று அன்புடன் அழைக்கப்படும் ஜெயலலிதாவின் பெயரைக் கேட்டாலே தமிழக மக்களின் முகத்தில் ஒரு பொலிவு உண்டாவதை இன்றும் தன்னால் உணர முடிகிறது என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதா அவர்களை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்தது.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து வலுவான நோக்கத்துடனும், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நலத்திட்டங்களாலும் இயக்கப்பட்ட நிர்வாகத்தில் சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்தார். கருணை, உறுதி என்ற இரண்டு பண்புகளையும் அவர் கொண்டிருந்தார்.
https://x.com/narendramodi/status/2026128604246229141?t=kqu_1PIclqi8Nbi273CQ8A&s=08
சமீபத்தில் தனது 131-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியிலும் ஜெயலலிதா குறித்துப் பேசியிருந்த பிரதமர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதிலும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர் எடுத்த உறுதியான நடவடிக்கைகள் என்றும் நினைவுகூரப்படும் என்று தெரிவித்தார். “நமது நாட்டின் ‘நாரி சக்தி’ (பெண் சக்தி) உடன் அவருக்கு இருந்த பிணைப்பு மிகவும் சிறப்பானது; தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் நலனுக்காக அவர் செய்த பணிகள் போற்றுதலுக்குரியவை” என்றும் பிரதமர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெயலலிதாவுடனான தனது தனிப்பட்ட நட்பையும் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார். தாங்கள் இருவரும் மாநில முதல்வர்களாக இருந்த காலத்தில், நல்லாட்சி குறித்துப் பலமுறை ஆலோசித்ததாகவும், அவரது சிந்தனைகள் எப்போதும் மிகவும் தெளிவாகவும் (Crystal Clear), உறுதியாகவும் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொங்கல் திருநாளில் ஜெயலலிதா தன்னைச் சென்னைக்கு மதிய உணவிற்கு அழைத்த அந்த அன்பான உபசரிப்பு என்றும் மறக்க முடியாதது என்று கூறிய பிரதமர், தேசப்பற்று மிக்க அந்தத் தலைவரின் சேவையை நாடு எப்போதும் போற்றும் எனத் தெரிவித்துள்ளார்.
