தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், திமுக ஆதரவுடன் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் தரப்பிலிருந்து இன்னும் இரண்டு நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோருக்கு இடையே நிலவும் முரண்பட்ட கருத்துகளால் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நிலவினாலும், கூட்டணி உறுதியாக இருப்பதாகத் தலைமை அறிவித்துள்ளது.
திமுகவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை: சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செல்வப்பெருந்தகை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். “திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் என்றைக்குமே செல்லாது, நல்லுறவு தொடர்ந்து நீடிக்கிறது” என்று கூறிய அவர், விரைவில் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசுவதற்கு அண்ணா அறிவாலயம் செல்ல இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், திமுக – காங்கிரஸ் கூட்டணியை உடைப்பதற்குச் சிலர் காத்திருப்பதாகவும், அதற்கு இடம் கொடுக்க மாட்டோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலிடப் பொறுப்பாளர் கருத்தால் சர்ச்சை: முன்னதாக, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், “ஆட்சி அதிகாரத்தில் பங்கு மற்றும் தவெக-வுடன் பேச்சுவார்த்தை” குறித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இருப்பினும், இது கிரிஷ் சோடங்கரின் தனிப்பட்ட கருத்து என்றும், கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்றும் செல்வப்பெருந்தகை மற்றும் விஜய் வசந்த் எம்.பி ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர். கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கூறுவதையே சக நிர்வாகிகள் ‘தனிப்பட்ட கருத்து’ என கூறுவதால் கட்சியின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது குறித்துத் தொண்டர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
