மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக எண்ணெய் விலைகள் ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில், தற்போது பாட்டில் தண்ணீர் விலைகளும் உயர்த்தப்படுகின்றன. பிஸ்லெரி நிறுவனம் சமீபத்தில் விலையை 11% உயர்த்தியுள்ளது.
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நடந்து வரும் மோதல் தற்போது இரண்டாவது மாதமாக தீவிரமடைந்து வருகிறது. இது ஏற்கனவே உலகளாவிய எண்ணெய் விநியோகத்தைப் பாதித்து, எரிபொருள் விலைகளை உயர்த்துகிறது. ஹார்முஸ் ஜலசந்தியின் முற்றுகையானது எண்ணெய், விவசாயம், விமானப் போக்குவரத்து, இரசாயனங்கள் மற்றும் எண்ணற்ற பிற தொழில்களைப் பாதிக்கிறது. இதன் நேரடி பாதிப்பு இப்போது இந்தியாவின் பேக்கேஜ்டு குடிநீர் (Packaged Drinking Water) துறையைத் தாக்கியுள்ளது. இந்தியாவின் முன்னணி நிறுவனமான பிஸ்லெரி (Bisleri), தனது தயாரிப்புகளின் விலையை 11 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் 12 ஒரு லிட்டர் பாட்டில்கள் கொண்ட ஒரு பெட்டியின் விலை ரூ/24 வரை அதிகரித்துள்ளது. பெய்லி (Bailey), கிளியர் (Clear) போன்ற பிற நிறுவனங்களும் விலையை உயர்த்தத் தொடங்கியுள்ளன.
விலை உயர்வுக்கு என்ன காரணம்?
குடிநீர் பாட்டில்கள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் PET (Polyethylene Terephthalate) பிளாஸ்டிக், கச்சா எண்ணெயிலிருந்து பெறப்படும் பாலிமர்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. போர் காரணமாக பாலிமர்களின் விலை 50 சதவீதம் உயர்ந்துள்ளது. பிளாஸ்டிக் துகள்களின் விலை ஒரு கிலோ ரூ.115-லிருந்து ரூ.180 ஆக அதிகரித்துள்ளதாகத் தொழில்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து பிஸ்லெரி சிஇஓ ஏஞ்சலோ ஜார்ஜ் கூறுகையில், “பேக்கேஜிங் மெட்டீரியல்களின் விலை கடந்த 15 நாட்களில் மட்டும் 70 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளதால், ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் விலை ரூ.20 ஆக உயர்ந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
விலை உயர்வு ஒருபுறம் இருக்க, பாட்டில்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விநியோகமும் குறைந்துள்ளதாக மகாராஷ்டிரா பாட்டில் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் விஜய் சிங் துப்பல் தெரிவித்துள்ளார். மூலப்பொருள் பற்றாக்குறையால் சுமார் 20 சதவீத பாட்டில் தயாரிப்பு ஆலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் 70 சதவீத நிலத்தடி நீர் மாசுபட்டுள்ள நிலையில், நகர்ப்புறங்களில் 15 சதவீத குடும்பங்களும், கிராமப்புறங்களில் 6 சதவீத குடும்பங்களும் சுத்தமான குடிநீருக்கு இந்த பாட்டில்களையே நம்பியுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு, சாதாரண மக்களின் பட்ஜெட்டில் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
