நாகப்பட்டினம் மாவட்டம் எட்டுக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாகும்.
பதினெண் சித்தர்களில் ஒருவரான வான்மீகி சித்தர் ஜீவசமாதி அடைந்த புண்ணிய ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில், பக்தர்களின் மனநிலைக்கு ஏற்ப இறைவன் குழந்தை, இளைஞன், முதியவர் ஆகிய வடிவங்களில் காட்சி அளிப்பதாக நம்பப்படுகிறது.
குறிஞ்சி நிலத்தின் காவடி சிறப்பை ஒத்த வகையில், மருத நிலமான எட்டுக்குடியில் பால் காவடி மிகவும் சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டுக்கான திருவிழா கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
11 நாட்கள் நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
கீழவீதியில் உள்ள தேரடியில் இருந்து புறப்பட்ட தேரினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் “கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா” என முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக நகர்ந்து மீண்டும் தேரடியை வந்தடையும்.
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 56 மணி நேர இடைவிடாத பாலாபிஷேகம் மற்றும் ரதக்காவடி ஊர்வலம் நடைபெறுகிறது.
பக்தர்கள் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. மேலும் பொது சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம்கள் மற்றும் குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. மேலும் அசம்பாவித சம்பவம் நிகழாமல் இருக்க 360 டிகிரி கோணத்தில் நகரும் சிசிடிவி வாகனம் மூலம் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.
