தனது இரண்டாவது சிம்பனி விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அன்னக்கிளி திரைப்படம் வெளியாகி 50 ஆண்டு ஆனதன் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். உங்களுக்குத்தான் ஐம்பது வருடம், எனக்கு அப்படியில்லை. வருடங்கள்தான் சென்றுக் கொண்டிருக்கிறதே தவிர நான் அதே இடத்தில்தான் இருக்கிறேன். நான் எப்பொழுது எப்படி வந்தேனோ இன்றும் அப்படியேதான் இருக்கிறேன், அதே தவிர வேறு எனக்கு எதுவும் தெரியாது என்றார்.
எனது 50 வருட பயணத்தை நினைவில் வைத்து நீங்கள் அனைவரும் என்னை வந்து சந்தித்து வாழ்த்துவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்கள் என்னை கொண்டாடுவது என் மீதான அன்பையே காட்டுகிறது.
துக்கத்தை வெல்வதற்கு மனிதர்களிடம் எந்த ஆயுதமும் கிடையாது. ஆனால் இசையால் அதை செய்ய முடியும்
நான் இசை அமைக்கும்போது எதையும் திட்டமிட்டு செய்வதில்லை. இயக்குனர்கள் சிச்சுவேஷனை சொன்னவுடன் நான் அதற்கான ட்யூனை போட்டு விடுவேன். எனது நோக்கம் எல்லாம் எனது இசையாகவே இருக்கும்.
நான் இல்லாமல் போனாலும் எனது பாடல்கள் என்றென்றும் கொண்டாடப்படும் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அன்னக்கிளி படத்தில் இசையமைக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தபோது எப்படி ஒரு பாடலை தொடங்குவது என்று அப்போதுதான் நான் யோசிக்கத் தொடங்கினேன். G.K. வெங்கடேஷிடம் உதவியாளராக இருந்தபோது, இதுபோன்ற சந்தேகங்கள் எனக்கு எழுந்ததில்லை.
200 படங்களில் உதவியாளராக பணிபுரிந்தாலும், நான் தனியே இசைமைக்கிறேன் என்றபோது ஒரு பாடலை எப்படி தொடங்குவது என்று யோசித்தேன்.ஒவ்வொரு பாடல்களையும் அதித மெனக்கெடல்களோடு இசையமைத்ததால் தான் அந்த பாடல் இன்றுவரை உயிரோடு இருக்கிறது.
இரண்டாவது சிம்பனி இசைமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இரண்டாவது சிம்பனி வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.
