புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இந்த கூட்டணியில் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக முக்கிய பங்காற்றின. மொத்தம் 18 தொகுதிகளில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி, ஆட்சியை மீண்டும் அமைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ரங்கசாமி ஐந்தாவது முறையாக புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் நமசிவாயம் மற்றும் மல்லாடி கிருஷ்ணா ராவ் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.ஆனால் அமைச்சரவை முழுமையாக இன்னும் அமைக்கப்படவில்லை. மீதமுள்ள மூன்று அமைச்சரவை பதவிகளைப் பெறுவதற்காக பாஜக மற்றும் என்.ஆர் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் இடையே கடும் போட்டி நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அமைச்சரவை அமைப்பில் பிராந்திய சமநிலை, சமூக பிரதிநிதித்துவம் மற்றும் கூட்டணி அரசியல் ஆகியவை முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகின்றன.
இந்நிலையில், புதிய சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு மற்றும் சட்டப்பேரவை நடைமுறைகளை சீராக நடத்தும் பொறுப்பில் தற்காலிக சபாநாயகர் முக்கிய இடத்தைப் பெறுகிறார். பொதுவாக நீண்டகால சட்டமன்ற அனுபவம் கொண்ட உறுப்பினர்களே இந்த பதவிக்கு தேர்வு செய்யப்படுவர். அந்த வகையில், 5-முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனுபவத்தின் அடிப்படையில் அன்பழகன் பரிந்துரை செய்து துணைநிலை ஆளுநருக்கு கோப்பு அனுப்பப்பட்ட நிலையில் ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் உள்ள சபாநாயகர் அறையில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்றுக்கொண்டார்.

மேலும், இந்த சட்டசபை தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள ரங்கசாமி, சட்டப்படி ஒரு தொகுதியை மட்டும் வைத்திருக்க முடியும் என்பதால், தட்டாஞ்சாவடி தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அவர் எந்த தொகுதியைத் தொடரப் போகிறார் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் ஆர்வம் நிலவி வருகிறது.
வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டம், புதிய அரசின் அரசியல் திசையையும், அமைச்சரவை விரிவாக்கத்தையும், சபாநாயகர் தேர்வையும் தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
