மதுராந்தகம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த மரகதம் குமரவேலுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டும், அதனை கிழித்தும், எரித்தும் அதிமுகவினர் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அதிமுகவில் நிலவும் உட்கட்சி மோதல் காரணமாக, மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏவாக இருந்த மரகதம் குமரவேல் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தில் அவர் இணைந்த சம்பவம், அதிமுகவினரிடையே அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தங்கள் தொகுதியின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்த மரகதம் குமரவேல், பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாற்று கட்சியில் இணைந்தநிலையில், தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், தொகுதியின் பல்வேறு இடங்களில் மரகதம் குமரவேலுக்கு எதிராக கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டிகளில், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி, விமர்சித்தும், அவரது உருவப்படத்தை எரித்தும் அதிமுகவினர் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்குப் பிறகு அதிமுகவில் தவெகவுக்கு ஆதரவு நிலைப்பாட்டில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு அணி தனியாக செயல்பட்டது.
இதனிடையே மே 25ம் தேதி மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகியோர் சபாநாயகரை நேரில் சந்தித்து, தங்கள் ராஜினாமா கடிதங்களை வழங்கி, பரபரப்பை ஏற்படுத்தினர். ராஜினாமா செய்த கையுடன், அவர்கள் மூவரும் தவெகவில் இணைந்தனர். இது திட்டமிட்ட நாடகம் என்றும், ‘குதிரை பேரம்’ நடைபெறுவதாகவும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
