ஈரோட்டில் ₹1 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், இளைஞர் ஒருவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V.கிரண் ஸ்ருதி, I.P.S. நேரடி மேற்பார்வையில் காவல் துறையினர் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகில் போதை மாத்திரைகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ஈரோடு வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் அப்பகுதியில் தீவிர வாகனச் சோதனையிலும், ரோந்துப் பணியிலும் ஈடுபட்டனர்.
அப்போது, கல்லூரிப் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபர் ஒருவரைப் பிடித்து போலீசார் சோதனை செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த கலைச்செல்வன் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த பையைச் சோதனை செய்தபோது, விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 3,000 போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ₹1 லட்சம் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்த போலீசார், கலைச்செல்வனைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
