இமாச்சலப் பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 500 அடி ஆழப் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெங்களூரைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலர், இமாச்சலப் பிரதேசத்தின் அழகிய பனிமலைகளைக் கண்டு ரசிப்பதற்காகச் சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள மலைப் பாதையில் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், மலைப் பாதையோரம் இருந்த சுமார் 500 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தலைகீழாக உருண்டு விழுந்தது.
இந்தக் கோர விபத்தில் வாகனத்தில் பயணித்த 8 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் இரண்டு சிறு குழந்தைகளும் அடங்குவர்.
விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், காவல்துறையினரும் மற்றும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பள்ளம் மிகவும் ஆழமாக இருந்ததால், நீண்ட போராட்டத்திற்குப் பிறகே உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கோடை விடுமுறையைக் கொண்டாடவும், பனிமலையைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடனும் துள்ளிக் குதித்துச் சென்றவர்கள், சடலமாக திரும்பிய சம்பவம் அவர்களது சொந்த ஊரில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து இமாச்சல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள், பெங்களூருவைச் சேர்ந்த அரவிந்த் சந்திரகர், அவரது மனைவி பிராச்சி, மகன்கள் தர்ஷ் மற்றும் அக்ஷத், கர்நாடகாவைச் சேர்ந்த பி.ஜி. கார்த்திகேயன், அவரது மனைவி மணிமாலா மற்றும் மகன் நந்தன், மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் சம்பாவிலிருந்து பானிகெட்டைச் சேர்ந்த வாடகைக்கார் ஓட்டுநர் விஸ்வாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
